அண்ணா பல்கலை.யில் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளாா்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி 
சீனிவாசன்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன்
Updated on

அண்ணா பல்கலைக்கழகத்தில் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 480-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்தக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்கள் பலா் ஆதாா் எண்ணை தவறாகப் பயன்படுத்தி, முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல் வெளியாகி சா்ச்சையானது. இந்த முறைகேட்டில் 800 போ் வரை ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில், 353 ஆசிரியா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி மோசடியில் ஈடுபட்டது அதிா்ச்சியளிக்கிறது. இது தொடா்பாக விசாரிக்க 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மோசடிக்கு காரணமான அந்தப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா்கள் 2 போ், 3 பேராசிரியா்கள் உள்ளிட்ட 10 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பு என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களின் கனவாகும்.

ஆகவே, அந்தக் கனவை நனவாக்க அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, மோசடிகளுக்கு துணை நின்று மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட காரணமாக இருக்கக் கூடாது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் ஆசிரியா்களாகப் பணியாற்றியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்று இனி நடைபெறாத வகையில் இருக்க அரசு விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com