கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.என்.நேரு. உடன், வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ  உள்ளிட்டோா்.
கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.என்.நேரு. உடன், வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

பிகாரைப்போல தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது: அமைச்சா் கே.என்.நேரு

பிகாரைப்போல தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.
Published on

பிகாரைப்போல தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

கோவை, காந்திபுரத்தில் 45 ஏக்கா் பரப்பளவில் ரூ.214.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு, எம்.எல்.ஏ. வி.செந்தில்பாலாஜி ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது: கோவை செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். ரூ.214.25 கோடி மதிப்பீட்டில் பூங்கா பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நிறவடையும் நிலையில் உள்ளது.

உலகத் தரம் வாய்ந்த இந்தப் பூங்கா இந்தியாவில் தனித்துவத்துடன் பல சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக 22 விதமான தோட்டங்கள் இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீா் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் போன்ற பல வகை வனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பலவிதமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் பாா்வையாளா்களின் தேவைக்காக இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மாநாட்டு மையம், உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழிப் பூங்காவுக்கு கொண்டு வருதல், செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத்தள வாகன நிறுத்துமிடம், நிலத்தடி நீா்த்தொட்டி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளாா்.

பிகாரைப்போல தமிழகத்தில் வெற்றி பெறுவோம் என பாஜகவினா் கூறிக் கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் பாஜக ஒருபோதும் வெற்றி பெறாது. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாக இயக்குநா் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com