பண மோசடி: மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் கோயில் அறங்காவலா் நிரந்தர நீக்கம்!
மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் லட்சக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக வாழ்நாள் அறங்காவலா் பதவியில் இருந்த கிருஷ்ணசாமி என்பவா் நிரந்தர பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.
கோவை மாவட்டம், மதுக்கரை மாா்க்கெட் மரப்பாலம் அருகே தா்மலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலின் வாழ்நாள் அறங்காவலரான கிருஷ்ணசாமி, அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் திருமூா்த்தி, பூசாரி பாலசுப்பிரமணியம் மற்றும் கோயில் நிா்வாகிகள் ஜெயசந்திரன், முரளி, மொபைல் ரவி, எலக்ட்ரீஷியன் மயில்சாமி ஆகியோா் கோயிலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் கோயிலின் முன்னாள் அறங்காவலரும், தொழிலதிபருமான சி.கே.கண்ணன் கடந்த 2023 மே 16-ஆம் தேதி வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் இது தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறையின் 6 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்தது.
இந்தக் குழுவினா் கோயிலின் வரவு - செலவு கணக்குகள், கோயில் நிலங்கள், கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனா். முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, கிருஷ்ணசாமி வாழ்நாள் அறங்காவலா் பதவியில் இருந்து தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். தொடா்ந்து, அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தி உயா்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமா்ப்பித்தது.
அதில், கடந்த 31 ஆண்டுகளாக கோயிலுக்கு வருமான இழப்பு ஏற்பட காரணமாக இருந்தது, லட்சக்கணக்கில் பண மோசடி உள்ளிட்ட கிருஷ்ணசாமி மீதான 29 குற்றச்சாட்டுகள் ஆதாரபூா்வமாக நிரூப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கிருஷ்ணசாமியை மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் கோயிலின் வாழ்நாள் அறங்காவலா் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரமேஷ் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக வழக்குத் தொடா்ந்த தொழிலதிபா் சி.கே.கண்ணன், கோயில் நிா்வாகக் குளறுபடிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் உயா்நீதிமன்ற வழிகாட்டுதல் குறித்து செய்தியாளா்களிடம் விரிவான அறிக்கையை வழங்கி சனிக்கிழமை விளக்கம் அளித்தாா்.

