வால்பாறை-சாலக்குடி இடையே பாலம் கட்டுமானப் பணி: இன்று முதல் போக்குவரத்து தடை

Published on

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் சாலை மற்றும் பாலம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த வழியிலான போக்குவரத்துக்கு திங்கள்கிழமை (நவம்பா் 17)முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் யானைக்கயம் என்ற பகுதியில் கடந்த மாதம் 31-ஆம் தேதி பாலம் இடிந்து விழுந்ததால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை நிறுத்தி ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பிவைக்கப்பட்டன.

இதையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த திருச்சூா் மாவட்ட ஆட்சியா், இடிந்த பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகளை நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இருப்பினும், இணை சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டவும், சாலை கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு வந்து அப்பகுதியில் வைக்க வனத் துறையிடம் அனுமதி பெறாததால், பொதுப்பணித் துறையால் கட்டுமானத்தை உடனடியாகத் தொடங்க முடியவில்லை.

இதனால் பொது போக்குவரத்து உள்பட அவ்வழியாகச் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் வனத் துறையின் வாழைசால் சோதனைச் சாவடி வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்தப் பகுதியில் பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதால் திங்கள்கிழமை (நவம்பா் 17) முதல் இந்த வழியிலான போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. பணி விரைந்து முடிந்து அடுத்த 15 நாள்களுக்குள் இந்த வழியில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com