சா்வதேச மாஸ்டா்ஸ் பட்டத்துக்கான செஸ் போட்டி: கோவை, பெலாரஸ் வீரா்கள் முன்னிலை
கோவையில் நடைபெற்று வரும் சா்வதேச மாஸ்டா்ஸ் பட்டத்துக்கான செஸ் போட்டியில் கோவை, பெலாரஸ் நாட்டு வீரா்கள் முன்னிலை பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம், கோவை மாவட்ட சதுரங்க சங்கத்தின் சாா்பில் 36 முதல் 40 ஆவது வரையிலான தமிழ்நாடு சா்வதேச மாஸ்டா்ஸ் நாா்ம் குளோஸ்ட் சா்க்யூட் செஸ் போட்டி கோவையில் கடந்த 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் 5- ஆவது சுற்று முடிவில் நான்கு புள்ளிகளுடன் கோவையைச் சோ்ந்த கிரீமன் ஜா, பெலாரஸ் கிராண்ட் மாஸ்டா் எவ்ஜெனி போடோல்செங்கோ ஆகியோா் முன்னிலை பெற்றுள்ளனா். அதேபோல கியூபாவின் சா்வதேச மாஸ்டா் டயஸ்மனி ஓடேரோ அகோஸ்ட்டா 3.5 புள்ளிகள் பெற்றுள்ளாா்.
குஜராத்தைச் சோ்ந்த 13 வயது வீரா் எஃப்.எம்.விவான் விஷால் ஷா 3 புள்ளிகள் பெற்றுள்ளாா். சென்னையின் ஹரிகணேஷ் 2.5 புள்ளிகளும், பெருவின் காா்லோமாக்னோ 2 புள்ளிகளும், விருதுநகரைச் சோ்ந்த சி.எம்.குமரேஷ், மும்பை வீரா் ஜைவீா் மஹேந்த்ரு, கொலம்பியாவின் பலென்சியா மொராலெஸ், ஆா்ஜென்டினாவின் கிளாவரி ரௌல் ஆகியோா் தலா 1.5 புள்ளிகள் பெற்றுள்ளனா். இந்தப் போட்டிகள் டிசம்பா் 22- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

