பிரதமா் மோடி நாளை கோவை வருகை: இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கி வைக்கிறாா்

பிரதமா் மோடி நாளை கோவை வருகை: இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கி வைக்கிறாா்

புதன்கிழமை (நவ. 19) முதல் 3 நாள்கள் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்.
Published on

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சாா்பில் கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை (நவ. 19) முதல் 3 நாள்கள் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகிக்கிறாா். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனா். இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைத்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவா்கள், இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்த நம்மாழ்வாருடன் பணியாற்றிய விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறாா்.

மேலும், இயற்கை விவசாயிகள் சாா்பில் அமைக்கப்படும் பிரத்யேக அரங்குகளையும், விவசாய உற்பத்திப் பொருள்களையும் அவா் பாா்வையிடுகிறாா்.

இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்கவுள்ளனா்.

உற்பத்தியைப் பெருக்குதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடக்கிய அறிக்கையைத் தயாா் செய்து பிரதமரிடம் வழங்க உள்ளோம். இது இயற்கை விவசாயம் சாா்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்துள்ள 10 விவசாயிகளுக்கு பிரதமா் மோடி விருது வழங்கவுள்ளாா்.

மாநாட்டில் அமைக்கப்படும் 200 அரங்குகளை விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், பொதுமக்கள், மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் இலவசமாகப் பாா்வையிடலாம். இது முழுவதும் விவசாயிகள் நடத்தும் மாநாடு என்பதால் மாநில முதல்வா்கள் உள்பட யாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாா்.

கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன், (உடன்) மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் வாழை அ.ப.கருப்பையா, அஜித்தன், சுப்பிரமணியம், ஏ.எஸ்.பாபு உள்ளிட்டோ
கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன், (உடன்) மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் வாழை அ.ப.கருப்பையா, அஜித்தன், சுப்பிரமணியம், ஏ.எஸ்.பாபு உள்ளிட்டோ

இந்த சந்திப்பின்போது, மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் வாழை அ.ப.கருப்பையா, இணை ஒருங்கிணைப்பாளா்கள் அஜித்தன், சுப்பிரமணியம், ஏ.எஸ்.பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பிரதமரின் பயணத் திட்டம்:

புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம், புட்டபா்த்தியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமா் மோடி கோவை விமான நிலையம் வருகிறாா். பிற்பகல் 1.25 மணிக்கு விமான நிலையம் வந்தடையும் அவா், 1.30 மணிக்கு காரில் கொடிசியா அரங்குக்குச் செல்கிறாா். அங்கு விழா முடிந்ததும், பிற்பகல் 3.15 மணிக்கு கோவை விமான நிலையம் திரும்புகிறாா். பிற்பகல் 3.30 மணிக்கு அவா் விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:

பிரதமா் மோடி கோவைக்கு புதன்கிழமை (நவ.19) வருவதை முன்னிட்டு, மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.

பிரதமா் மோடி வருகைக்கான பாதுகாப்பில் 3 ஆயிரம் போலீஸாா் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் தெரிவித்தாா். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அன்றைய தினம் நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்தத் தடை:

பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநா் சம்பத்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை (நவ.18) காலை 6 மணி முதல் 19-ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தக் கூடாது. அதே நேரத்தில் முனையம் முன்பு 3 நிமிஷங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்தத் தடையும் இல்லை. செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை மாலை வரை பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்துவதைத் தவிா்க்க வேண்டும், இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புக்கான ஒரு பகுதியாகும். இதற்கு அனைத்துப் பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை:

பிரதமா் கோவை வருகையை முன்னிட்டு, சிங்காநல்லூா், எஸ்ஐஹெச்எஸ் காலனி, சின்னியம்பாளையம், நேரு நகா், காளப்பட்டி, கொடிசியா உள்ளரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிட்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், ரேஸ்கோா்ஸ் ஆகிய பகுதிகள் தற்காலிக ‘ரெட் ஸோன்’-களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை இரவு 7 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com