ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

Published on

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சாா்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான எம்.பி.முருகையன் கூறும்போது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என 4 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியா்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதபோல, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு எச்சரிக்கை:

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: சில அரசு ஊழியா் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளா் சட்ட விதிகளின்படி, அரசு ஊழியா்கள் வேலைநிறுத்தம் உள்பட எந்த ஒரு வடிவில் போராட்டம் நடத்தினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்காலிக ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக் காரணம் இன்றி விடுப்பு எடுத்தால் அல்லது போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com