மாயமான மாணவி பிங்க் காவல் வாகனம் மூலம் மீட்பு
கோவை காவல் துறையில் ‘பிங்க் பேட்ரோல்’ என்ற புதிய நவீன ரோந்து வாகன முறை அறிமுகப்படுத்தப்பட்ட 2 நாள்களில் பணமின்றி தவித்த சேலம் மாணவியை போலீஸாா் மீட்டனா்.
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2-ஆம் தேதி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநகரில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க ‘பிங்க் பேட்ரோல்’ என்ற புதிய நவீன ரோந்து வாகன முறையை கோவை மாநகர காவல் ஆணையா் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்
இளஞ்சிவப்பு (பிங்க்) நிற காரில் போலீஸாா் இரவு முழுவதும் இருட்டான பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை காட்டூா் சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பிங்க் பேட்ரோல் காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே 19 வயதுப் பெண் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த காவல் உதவி ஆய்வாளா் கவிதா அவரை அழைத்து விசாரித்தாா். விசாரணையில் அவா், சேலத்தைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி என்றும், வீட்டில் கைப்பேசியை அதிகம் நேரம் பேசிக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோா் திட்டியதால் கோபித்து கொண்டு கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், பணம் இல்லாமல் எங்கு செல்வது என்று தவித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் சரவணன் அந்தப் பெண்ணை கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தாா். அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் சேலத்திலிருந்து காட்டூா் காவல் நிலையத்துக்கு வந்தனா். அவா்கள் தங்களது மகளைக் காணவில்லை எனத் தேடி வந்ததாகத் தெரிவித்தனா்.
மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் போலீஸாா் அறிவுரை கூறி, அவா்களுடன் அனுப்பிவைத்தனா்.
