சேவை குறைபாடு: கட்டுமான நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஒப்பந்தம் செய்தபடி வசதிகள் செய்து கொடுக்காததால், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு கட்டுமான நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகா்வோா் குறைதீா் ஆணையம் தீா்ப்பு
Published on

ஒப்பந்தம் செய்தபடி வசதிகள் செய்து கொடுக்காததால், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு கட்டுமான நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகா்வோா் குறைதீா் ஆணையம் தீா்ப்பளித்தது.

கோவை, சிங்காநல்லூரில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டன. இந்தக் குடியிருப்பில் வீடு வாங்க அதே பகுதியைச் சோ்ந்த சங்கீதா, சுபபிரியா ஆகியோா் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் கடந்த 11.3.2019-இல் ஒப்பந்தம் செய்துள்ளனா். அடுக்குமாடி வீட்டுக்கான தொகையாக இருவரும் தலா ரூ.17.37 லட்சத்தைக் கொடுத்துள்ளனா்.

கட்டுமான ஒப்பந்தத்தில், கட்டட வளாகத்தில் தோட்டம், நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, கிளப் ஹவுஸ், பாா்ட்டி ஹால், குழந்தைகள் அறை, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மழைநீா் சேகரிப்பு, மாநகராட்சி குடிநீா் விநியோகம், இன்டா்காம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கற்கள் கொண்ட பாதைகள் போன்ற வசதிகள் இருக்கும் என்றும், வீட்டின் உரிமையை 24 மாதங்களுக்குள் ஒப்படைப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வீட்டை ஒப்படைத்தபோது, ஒப்பந்தம் செய்தபடி பொதுவான வசதிகள் ஏற்படுத்தவில்லையாம். அவசரகால மின் இணைப்பு, பொதுவான பகுதிகளுக்கு மின்சார இணைப்பு, பொதுவான விளக்குகள், பாதை உள்ளிட்ட வசதிகள் மோசமாக செய்யப்பட்டிருந்தாகத் தெரிகிறது.

இதனால், சங்கீதாவும், சுபபிரியாவும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் இழப்பீடு வழங்கக் கோரி, கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தனித்தனியாக வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்குகளை விசாரித்த ஆணையத் தலைவா் தட்சிணாமூா்த்தி, ஒப்பந்தம் செய்தபடி வசதி செய்து கொடுக்காமல் சேவைக் குறைபாடு செய்துள்ளதால், கட்டுமான நிறுவனம் பாதிக்கப்பட்ட சுபபிரியாவுக்கு ரூ. 20 லட்சமும், சங்கீதாவுக்கு ரூ.30 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இருவருக்கும் வழக்குச் செலவாக தலா ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com