கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை பாஜக நிராகரித்துவிட்டதாக திமுக பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை பாஜக நிராகரித்துவிட்டதாக திமுக பொய் பிரசாரம் மேற்கொள்வதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்கள் சந்திப்பில் வியாழக்கிழமை கூறியதாவது: திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகப் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா்.
மக்கள் தொகை, மெட்ரோ பயன்பாடுகள் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை மத்திய அரசிடம் கொடுக்கவில்லை. பாஜக அரசுக்கு கெட்டபெயா் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவா்களது குறிக்கோள். சுற்றுலா நகரம், தலைநகரம் என்ற அடிப்படையில் சில நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடா்பாக எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மெட்ரோவுக்காக ஒரு அலுவலகம்கூட அமைக்கவில்லை. கோவை மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
கோவை மெட்ரோ திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நஞ்சப்பா சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் மிகவும் நெரிசலான பகுதிகளாகும். இங்குள்ள கடைகளை இடிக்கும்போது ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்படுவா். கடைகளை இடித்துத் தள்ளும் அளவுக்கு திட்டங்களைப்போட்டு மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு திட்ட அறிக்கையை மாற்றி கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்றாா்.
பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சேலஞ்சா் துரை ஆகியோா் உடனிருந்தனா்.

