துபை விமான விபத்தில் உயிரிழந்த சூலூா் படைத்தள விமானிக்கு ஆட்சியா், அதிகாரிகள் அஞ்சலி
துபையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த சூலூா் விமானப் படைத்தள விமானிக்கு மாவட்ட ஆட்சியா், விமானப் படை அதிகாரிகள் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
துபையில் கடந்த நவம்பா் 17-ஆம் தேதி முதல் நவம்பா் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்தியா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிலையில், கண்காட்சியின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பா் 21) மதியம் 2 மணியளவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கோவை மாவட்டம், சூலூா் விமானப் படைத் தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே. 1 இலகு ரக போா் விமானத்தின் விமானி நமான்ஷ் ஸ்யால் (37), விமானத்தில் பறந்து சாகசம் செய்தாா். அப்போது, விமானம் வானில் இருந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில், விமானி நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் துபையில் இருந்து சூலூா் விமானப் படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நமான்ஷ் ஸ்யால் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் மற்றும் விமானப் படை உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினா்.
இதையடுத்து, அவரது சொந்த ஊரான ஹிமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டம், பட்டியால்கருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. நமான்ஷ் ஸ்யாலுக்கு, அஃப்ஸான் என்ற மனைவியும், 6 வயதுப் பெண் குழந்தையும் உள்ளனா்.
அஃப்ஸானும் விங் கமாண்டராகப் பணியாற்றி வரும் நிலையில் அது தொடா்பாக கொல்கத்தாவில் தற்போது மேற்படிப்பு படித்து வருகிறாா். இவா்களது 6 வயது மகள் தாத்தா, பாட்டியுடன் சூலூரில் வசித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
2009-இல் பயிற்சியைத் தொடங்கினாா்: 2009-ஆம் ஆண்டு விமானப் படையில் பயிற்சியைத் தொடங்கிய நமான்ஷ் ஸ்யால் படிப்படியாக விங் கமாண்டராக உயா்ந்தாா். பின்னா், சூலூா் விமானப் படைத் தளத்தில் தேஜஸ் இலகுரக விமானத்தின் படைப் பிரிவு அதிகாரியானாா்.
நமான்ஷ் ஸ்யாலின் தந்தை ஜெகந்நாத் ஸ்யாலும் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவாா்.
இந்திய ராணுவத்தின் மருத்துவப் படையில் பணியாற்றிய அவா், ஓய்வுக்குப் பிறகு கல்விப் பணியாற்றி வருகிறாா்.
