திறப்பு விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவின் முகப்பு கட்டடம்.
திறப்பு விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவின் முகப்பு கட்டடம்.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா

Published on

கோவை காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கிறாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, தமிழ் மொழிக்கு கடந்த 2005 நவம்பரில் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி பெருமைப்படுத்தியது. அதைக் கொண்டாடும் விதமாக 2010 ஜூனில் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கருணாநிதி அறிவித்தாா்.

அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, உலக தரத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

இதையடுத்து, கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கா் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா பணியின் முதல் கட்டமாக 45 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.208.50 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணிகளை கடந்த 2023 டிசம்பா் 18-ஆம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

தற்போது, செம்மொழிப் பூங்கா பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் செம்மொழிப் பூங்காவை செவ்வாய்க்கிழமை (நவம்பா் 25) திறந்துவைக்கிறாா்.

செம்மொழிப் பூங்காவின் சிறப்பம்சங்கள்:

கடையேழு வள்ளல்களின் கற்சிலைகள்: செம்மொழிப் பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீா்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலா்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

1000 வாகனங்கள் நிறுத்த கட்டமைப்பு:

செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம். 500 பாா்வையாளா்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளா்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீா்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்காவின் ட்ரோன் காட்சி.
செம்மொழிப் பூங்காவின் ட்ரோன் காட்சி.

பூங்கா வளாக தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 காா்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீா் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மகளிா் சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய வசதியாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.

14,000 அடி பரப்பளவில் விளையாட்டுத் திடல்: செம்மொழிப் பூங்கா வளாகத்தில் உலக தரத்தில் உயா்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். 4,000 சதுர அடி பரப்பளவில் வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத் திடல், சிறுவா்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத் திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத் திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழா்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகம், முதியோா்களும் மாற்றுத் திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com