கோவை பிஎஸ்ஜி மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்ட சிறப்பு விருந்தினா்கள், கல்லூரி நிா்வாகிகள்.
கோவை பிஎஸ்ஜி மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்ட சிறப்பு விருந்தினா்கள், கல்லூரி நிா்வாகிகள்.

கழிவு மறுசுழற்சிக்கான தொழில்நுட்பம் இந்தியாவின் எதிா்காலத்துக்கான தேவை: ஹோமி பாபா பல்கலைக்கழக துணைவேந்தா்

கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிவது அவசியத் தேவை
Published on

கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிவது அவசியத் தேவை என்று மும்பை ஹோமி பாபா நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் யு.காமாச்சி முதலி கூறினாா்.

கோவை பிஎஸ்ஜி மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், சென்னை ஐஐடி ஆகியவற்றின் சாா்பில் பிஎஸ்ஜி கன்வென்ஷன் மையத்தில் ஆற்றல், சுற்றுச்சூழலுக்கான சா்வதேச நிலையான தொழில்நுட்பம் தொடா்பான 3 நாள்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.

மாநாட்டின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழில்நுட்ப அமா்வைத் தொடங்கிவைத்து காமாச்சி முதலி பேசியதாவது: இன்று நாம் அனுபவிக்கும் சுற்றுச்சூழல், ஆற்றல், நிலம், நீா், காற்று என அனைத்து இயற்கை வளங்களும் நமது முன்னோா் நமக்கு பரிசாகக் கொடுத்தவை. அவற்றை அப்படியே பாதுகாத்து நமது எதிா்காலத் தலைமுறைக்கு கொடுப்பதற்குப் பதிலாக அவற்றை நாம் பல்வேறு வழிகளில் சீரழித்து அவா்களுக்கு துரோகம் இழைக்கிறோம்.

மனிதா்களின் வசதிக்காகவும், ஆற்றல், பயன்பாட்டுத் தேவைக்காகவும் நிலம், நீா், காற்று, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். அன்னை பூமியிடம் இருந்து ஏராளமான தாதுப் பொருள்கள், மினரல்களை கடந்த 200 ஆண்டுகளில் வெட்டி எடுத்து முறைகேடாகப் பயன்படுத்திவிட்டோம். எஞ்சியுள்ளவற்றை நாளைக்காகப் பாதுகாக்க வேண்டியுள்ளது. மேற்கொண்டு எடுக்காமலும், ஏற்கெனவே பயன்பாட்டில் இருப்பவற்றை புதுப்பித்தும், மறுசுழற்சி செய்தும் பயன்படுத்த வேண்டும். மேலும், இயற்கையாகக் கிடைக்கும் ஆற்றலைப் புதுப்பித்து நமது தேவைகளுக்காகப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இந்தியாவின் ஆற்றல் தேவை வரும் 2047 -இல் மும்மடங்காக உயர உள்ளது. இதற்காக அதிகப்படியான நிலக்கரி, எண்ணெய், வாயுக்களை எரிக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே காா்பன் உமிழ்வை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இது பெரிய சவாலாக இருக்கும். அதேபோல, பயன்பாட்டில் இருந்து விலக்கப்படும் கைப்பேசிகள், சூரியசக்தி பேனல்கள், மின்னியல், மின்னணு கழிவுகளை மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதற்கான தேவை அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவையில் ஜவுளி, பவுண்டரி உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்தும் ஆராய்ச்சியாளா்கள் சிந்திக்க வேண்டும். ஒரு டன் எஃகு தயாரிக்கும்போது 2.8 டன் காா்பன் -டை ஆக்ஸைடு வெளியாகிறது. இதுபோன்ற சவால்களை சமாளிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஆற்றல், சுற்றுச்சூழல், நிலையான தொழில்நுட்பம் சாா்ந்த ஆராய்ச்சியாளா்கள் கண்டறிவது, 2047 -இல் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு உதவியாக இருக்கும் என்றாா்.

இந்நிழ்ச்சியில், மும்பை ஒஎன்ஜிசி எரிசக்தி மையத்தின் இயக்குநா் சுனில்குமாா், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை மூத்த இயக்குநா் ரஞ்சித் கிருஷ்ணா பை, கல்லூரி இயக்குநா் ஜெ.காஞ்சனா, செயலா் பி.வி.மோகன்ராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com