சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவைக்கு வந்த அவருக்கு கோயம்புத்தூா் சிட்டிசன்ஸ் ஃபோரம் என்ற அமைப்பின் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக செஷல்ஸ் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவரை தமிழக வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் வரவேற்றனா்.
இதையடுத்து விமான நிலையத்துக்கு வெளியே அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பாஜகவினா், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதேபோல பாஜகவின் விவசாயிகள் அணி சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா் கொடிசியா வளாகத்தில் பேண்டு வாத்தியம் முழங்க சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல பேரூராதீன மடத்தில் பள்ளிக் குழந்தைகள் தேசியக் கொடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளித்தனா்.

