வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்

வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்
Published on

வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மீ.தமிழ்ச்செல்வி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை 146.04 மீ.மீட்டா் பதிவாகியுள்ளது. மேலும், தற்போது பருவமழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகவே, மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை ஆகிய பயிா்களில் மகசூல் இழப்பை தவிா்க்கும் வகையில் இந்த பருவத்தில் காப்பீடு செய்யலாம்.

பயிா்க் காப்பீடு பிரிமீய தொகையாக ஒரு ஏக்கா் மக்காச்சோளம்-ரூ.545, கொண்டைக்கடலைக்கு-ரூ.254, சோளம்-ரூ.173-ஐ செலுத்தி உரிய காலத்துக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.36,300, சோளத்துக்கு ரூ.11,503, கொண்டைக்கடலைக்கு ரூ.16,940 காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

இந்தப் பயிா்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல், பயிா் சாகுபடி அடங்கல், விண்ணப்பப் படிவம் மற்றும் முன்மொழிவுப் படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

மழையால் மகசூல் இழப்பீடு ஏற்படும் பட்சத்தில் உரிய காப்பீட்டுத் தொகை பெற்று பயனடையலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com