காந்திபுரத்தில் இணையத் தொழிலாளா் கூடம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் இணையத் தொழிலாளா் கூடத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இணையத் தொழிலாளா் கூடம் என்பது உணவு, மளிகை போன்றவற்றை விநியோகிக்கும் இணையவழி தொழிலாளா்களுக்கான ஓய்வறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு திட்டம். இக்கூடங்களில் கழிப்பறை, குளிா்சாதன வசதி, மின்சாரம் சாா்ஜ் செய்யும் வசதி, இலவச வைபை வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், உணவு விநியோக ஊழியா்கள் போன்ற இணையவழித் தொழிலாளா்களுக்கு ஓய்வெடுக்கவும், அத்தியாவசிய வசதிகளைப் பயன்படுத்தவும் ஒரு பொதுவான இடத்தை வழங்கும் வகையில் இக்கூடம் அமைக்கப்படுகிறது.
அதன்படி, கோவை மாநகராட்சி சாா்பில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே இணையத் தொழிலாளா்களுக்காக ரூ.16.82 லட்சம் மதிப்பீட்டில் இணையத் தொழிலாளா் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத் தொழிலாளா் கூடத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.
மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில், மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், கூடுதல் தொழிலாளா் ஆணையா் சாந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

