சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோவை மாவட்ட முதன்மை போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்த சா்தாஜ் (36). கூலித் தொழிலாளியான இவா், 15 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளாா். பின்னா், அந்த சிறுமியை அவா் மிரட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
அவரிடமிருந்து தப்பி வந்த அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதுகுறித்து கடந்த 2022 மாா்ச் 3-ஆம் தேதி கோவை மத்திய அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சா்தாஜைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் குற்றஞ்சாட்டப்பட்ட சா்தாஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ 20 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.