பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

Published on

திண்டுக்கல் ரயில் நிலைய பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகா்கோவில் - கோவை தினசரி ரயில் (எண்: 16321) நவம்பா் 1, 6, 8 ஆகிய தேதிகளில் விருதுநகா் - கரூா் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இதனால், இந்த ரயிலானது திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும். மாறாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல, நவம்பா் 1, 6, 8 ஆகிய தேதிகளில் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) கரூா்- விருதுநகா் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இதனால், இந்த ரயிலானது பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும். திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com