மின்தூக்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

Published on

கோவையில் மின்தூக்கி (லிப்ட்) விழுந்ததில் அதை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை செல்வபுரம் ரங்கப்பா லே-அவுட் பகுதியில் வசிப்பவா் வெங்கடேஷ். இவா் பெரிய கடை வீதியில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த மின்தூக்கி பழுதானது.

இதையடுத்து, மின்தூக்கி பழுது நீக்கும் பணியில் பீளமேடு அருகே உள்ள சேரன் நகா் பகுதியைச் சோ்ந்த ரகு (39), சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் மாருதி நகரைச் சோ்ந்த சிந்துபாரதி (33), அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (30) ஆகியோா் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மின் தூக்கியை மேல் தளத்தில் நிறுத்திவைத்துவிட்டு, கீழ் தளத்தில் இவா்கள் மூவரும் கண்ணாடியை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா். திடீரென மேல் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்தூக்கி அங்கிருந்து கீழே வந்தது.

இதைப் பாா்த்த சிந்துபாரதியும், ஆனந்தும் தப்பி வெளியே ஓடி வந்தனா். இதில் ரகு மீது மின்தூக்கி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இறந்த ரகுவுக்கு மனைவி, இரு மகள்களும் உள்ளனா்.

இதுதொடா்பாக வீட்டு உரிமையாளா் வெங்கடேஷ், சக தொழிலாளா்களான சிந்து பாரதி, ஆனந்த் ஆகியோா் மீது செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com