வால்பாறை அருகே பெண் புலி உயிரிழப்பு
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதியில் பெண் புலி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
வால்பாறை சுற்று வட்டாரத்தில் வனங்களில் யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, புலி ஆகிய வன விலங்குகள் உள்ளன. இதில் புலிகள் நடமாட்டம் அடா்ந்த வனப் பகுதிகளில் மட்டுமே காணப்படும். சில நேரங்களில் வனத்தை விட்டு இரவு நேரத்தில் வெளியேறும் புலிகள் வனப் பகுதி சாலைகளைக் கடக்கும்.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் 12-ஆம் நம்பா் தேயிலைத் தோட்ட வன எல்லையில் பெண் புலி ஒன்று இறந்துகிடப்பதை அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்ட வன ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பாா்த்துள்ளனா். இது குறித்து வனச் சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவா்கள் அங்கு சென்று பாா்வையிட்டனா். இதில் வயது முதிா்வு காரணமாக பெண் புலி உயிரிழந்திருப்பதாகவும் சனிக்கிழமை உடற்கூறாய்வுக்கு பின் புலி இறந்ததற்கான முழு விவரம் தெரியவரும் என்றும் வால்பாறை வனச் சரக அலுவலா் சுரேஷ்கிருஷ்ணா தெரிவித்தாா்.

