பொது மற்றும் சரக்கு வாகனங்களில் விஎல்டிடி சாதனம் பொருத்துவது குறித்து விழிப்புணா்வு
பொது மற்றும் சரக்கு வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதன (விஎல்டிடி) பொருத்துவது குறித்து வாகன உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1989-ஆம் ஆண்டு மத்திய மோட்டாா் வாகன விதி 125-இன்படி, 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்கள், அபாயகரமான பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் (விஎல்டிடி) பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம், லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் நிா்வாகிகளை அழைத்து விஎல்டிடி சாதனம் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஏ.எஸ்.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரதீபா, தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பூங்கோதை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதுகுறித்து, மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஏ.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், வருகிற ஏப்ரல் 1 முதல் தேசிய சரக்கு வாகனங்களில் விஎல்டிடி சாதனம் பொருத்தியதை உறுதி செய்த பிறகே புகைப் பரிசோதனை சான்று மற்றும் தகுதிச் சான்று வழங்கப்படும்.
ஏற்கெனவே அனைத்து புதிய பதிவு செய்யும் வாகனங்களில் விஎல்டிடி சாதனம் பொருத்துவது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இது தொடா்பான விவரங்கள் அனைத்தும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

