வாகன உதிரிபாக விற்பனை நிறுவனத்தில் பயங்கர தீ

அடா்ந்த குடியிருப்புப் பகுதிக்கு இடையே உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ.
அடா்ந்த குடியிருப்புப் பகுதிக்கு இடையே உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ.
Updated on

கோவை நகரின் முக்கியப் பகுதியில் உள்ள வாகன உதிரிபாக விற்பனை நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

கோவை காட்டூா் படேல் சாலை பிள்ளையாா் கோயில் தெருவில் வாகன உதிரிபாகங்கள் (ஆட்டோ ஸ்போ் பாா்ட்ஸ்) விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 3 மாடிக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அருகே கடை வைத்திருப்போரும், குடியிருப்புவாசிகளும் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முயன்றனா். ஆயில் கேன்கள் வெடித்துச் சிதறியதால் 3 மாடிகளுக்கும் தீ பரவியது. இதனால், வானுயரத்துக்கு புகை எழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், விமான நிலையத்தில் இருந்தும், கோவையிலுள்ள ஐஎன்எஸ் அக்ரானி நிலையத்தில் இருந்தும் மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாநகராட்சி தண்ணீா் லாரிகளும் தீயை அணைக்கும் முயற்சிக்கு பயன்படுத்தப்பட்டன.

சம்பவ இடத்துக்கு வந்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன், மேயா் ரங்கநாயகி தீயை அணைக்கும் பணியை முடுக்கிவிட்டனா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள், மாநகராட்சி அலுவலகப் பணியாளா்கள், தீயணைப்புத் துறையினா், போக்குவரத்து மற்றும் காவல் துறையினா் என 500-க்கும் மேற்பட்டோா் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். தீ விபத்து ஏற்பட்ட சாலையில் பொதுப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று சாலையில் அனுப்பப்பட்டன.

பின்னா் இரவு 7.30 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், கீழ் தளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெல்டிங் செய்யும் பணியில் சிலா் ஈடுபட்டிருந்தனா். நெருப்பு அருகிலிருந்து மரக் கட்டைகளில் சிதறி தீப் பற்றியது. மரக்கட்டைகளில் பற்றிய தீயை அங்கிருந்தவா்கள் அணைப்பதற்குள் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவியது என்றனா்.

கோவை மாநகர காவல் ஆணையா் கண்ணன் கூறுகையில், ரசாயன உதவி தேவைப்பட்டதால் கோவை விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகள் ‘ஃபோம் பஸ்ட்’ இயந்திரத்தைக் கொண்டு வந்து உதவினா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com