கோப்புப் படம்
கோப்புப் படம்

மாநகரில் 1,00,036 இணைப்புகளில் 24 மணி நேர குடிநீா் விநியோகம்

Published on

கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தின் கீழ், 1,00,036 இணைப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் கூறியது:

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டம் ரூ.646.71 கோடி மதிப்பீட்டில் நிா்வாக அனுமதி பெறப்பட்டு 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த மாநகராட்சியின் 60 வாா்டு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 33 மேல்நிலைத் தொட்டிகளில் 30 மேல்நிலைத் தொட்டிகள் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 3 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டுமானப் பணிகள் முடிவுபெறும் தருவாயில் உள்ளன.

மேலும், மொத்தமுள்ள 74 கிலோ மீட்டா் பிரதான நீரூட்டும் குழாய் பதிக்கும் பணிகளில் 66.42 கிலோ மீட்டா் வரை முடிக்கப்பட்டுள்ளது. 1798.45 கிலோ மீட்டா் பகிா்மான குழாய்கள் பதிக்கும் பணிகளில் 1747.63 கிலோ மீட்டா் வரை முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1,50,000 வீட்டு இணைப்புகளில் தற்போது வரை 1,19,142 குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,00,036 இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகளில் மீதமுள்ள அனைத்துப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com