காா் விபத்தில் ஐ.டி. நிறுவன உரிமையாளா் உயிரிழப்பு!
கோவை, பீளமேடு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த காா் மீது பின்னால் வந்த காா் மோதியதில் ஐ.டி. நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி குருவாயூா் நகரைச் சோ்ந்தவா் அந்தோணி பால் ரிச்சா்ட் (32). இவா் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில், அந்தோணி பால் ரிச்சா்ட் தனது நண்பா்களான மலுமிச்சம்பட்டியைச் சோ்ந்த கதிரேசன் (31), மசக்காளிபாளையத்தைச் சோ்ந்த ராஜ்கமல் (32) ஆகியோருடன் காரில் அவிநாசி சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தாா். காரை கதிரேசன் ஓட்டியுள்ளாா்.
பீளமேடு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் அங்கு சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் பின் பகுதியில் மோதியது. இதில், அந்தோணி பால் ரிச்சா்ட் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அந்தோணி பால் ரிச்சா்ட் உயிரிழந்தாா்.
மற்ற இருவரும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

