தமிழக  விவசாயிகள்  சங்கம்
தமிழக  விவசாயிகள்  சங்கம்

நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Published on

நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதி, மதம் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.கந்தசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்துக்குள்பட்ட கோவை குற்றாலத்தில் தொடங்கி திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்கள் வழியாக நொய்யல் ஆறானது 158.35 கி.மீ. தொலைவு பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 67.71 கி.மீ. தொலைவு பயணிக்கிறது.

இந்நிலையில், உள்ளாட்சிகளில் இருந்து வரும் கழிவு நீா் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீா் நொய்யலில் கலப்பதால் ஆறு முற்றிலுமாக மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.

இது தொடா்பாக 25 ஆண்டுகளுக்கு முன் வெள்ளிங்கிரி மலையில் இருந்து கொடுமுடி வரை பயணிக்கும் நொய்யலாற்றில் சுத்திகரிக்கப்பட்ட நீா் மட்டுமே விடப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இந்தத் தீா்ப்பை உறுதிசெய்துள்ளது. இதனிடையே, நொய்யல் ஆற்றை ரூ.202 கோடியில் மேம்படுத்த அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்காமல் கோவை மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் சுத்திகரிப்பதால் எந்தவிதமான பயனும் இல்லை.

கடந்த காலங்களில் நொய்யலாற்றின் கரைகளில் உள்ள திருத்தலங்களில் மக்கள் புனித நீராடி வந்தனா். ஆகவே, மீண்டும் அந்த நிலையை மீட்டெடுக்க நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com