கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரை சீராபாளையம் புதூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (36). அதே பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (48). நண்பா்களான இருவரும் கட்டட வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில், மதுபோதையில் இருவருக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ் இரும்புக் குழாயால் சக்திவேலை தாக்கியுள்ளாா். படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவா் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

