தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமலில் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவால் நிறுத்திவைக்கப்பட்ட, விவசாயிகளின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு முறையை மீண்டும் அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள 8 வளாகங்களில் 11 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 13 இளநிலை படிப்புகளும், 40 முதுநிலைப் படிப்புகளும், 26 ஆய்வுப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.
2013-14 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில், அரசுக் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 1330. இதுதவிர சுயநிதிப் பிரிவின் கீழ் தனியார் கல்லூரிகளில் 290 இடங்களில் மாணவ, மாணவிகள் சேரலாம்.
விவசாயிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், விவசாயிகளின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறை 2007-08 வரை நடைமுறையில் இருந்தது. இந் நிலையில் விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், இந்த மூன்று பிரிவுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. விவசாயிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு முறை நிறுத்தப்பட்டது.
2007-08இல் மட்டும் விவசாயிகளின் வாரிசுகள் 65 பேர் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலைப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கிராமப்புறங்களில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், இளைஞர்கள் அதிகளவில் விவசாயத்துக்கு வர வேண்டும் என ஆட்சியாளர்களும், விஞ்ஞானிகளும் அறைகூவல் விடுத்து வருகின்றனர்.
ஊரகப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் வேளாண் துறையின் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, நகரப் பகுதிகளைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் வேளாண்மைப் படிப்புகளைப் படித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு விவசாய நிலங்களில் செயல்விளக்கம் செய்ய போதிய வாய்ப்புகள் இல்லாமல் போகின்றது.
அதேநேரத்தில், விவசாயிகளின் வாரிசுகள் வேளாண் படிப்புகளைப் படிக்கும்போது அவர்கள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுகிறது எனப் பேராசிரியர்கள், வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இரண்டாவது வேளாண்மைப் புரட்சிக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதேநேரத்தில், வேளாண்மைத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இச் சமயத்தில், விவசாயிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசுக்குப் பரிந்துரை: இதனிடையே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநில திட்டக் குழு உறுப்பினருமான (வேளாண்மை) கு.ராமசாமி, விவசாயிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீட்டு முறையை மீண்டும் கொண்டு வரலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இப் பரிந்துரையை ஏற்று அரசும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-15 கல்வியாண்டில், 5 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு முறை மீண்டும் அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.