ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டம்

கோவைஅறிமுகப்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக
Updated on
2 min read

கோவைஅறிமுகப்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக க.திருவாசகம் இருந்தபோது, ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு ஏழை மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

இத்திட்டத்தின்படி, பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட தனியார் கல்லூரிகள், இளநிலை படிப்புகளில் 5 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். இதற்காக கல்லூரி முதல்வர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.

இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 30 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்றோர், கணவரை இழந்த பெண்களின் குழந்தைகள், இயற்கைப் பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 108 தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.

தமிழகத்திலேயே முன்மாதிரியான இத்திட்டத்தை அப்போதைய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த க.திருவாசகம் (2006-2009) கொண்டுவந்தார். அவரது பதவிக்காலத்தில், 2008-ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

மேலும், பல்கலைக்கழக இணையதளத்தில் பாரதியார் பல்கலைக்கழக இலவச கல்வி திட்டத்தில் சேர்வதற்கென பல்கலைக்கழக இணையதளத்தில் தனியாக அறிவிப்பு செய்யப்பட்டு, கமிட்டி மூலம் கண்காணிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இலவச கல்வித் திட்டம் மூலம் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை பயன்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சுவாமிநாதன் பதவிக்காலத்தில் இலவச கல்வித்திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடப்பது ஓரளவு கண்காணிக்கப்பட்டு வந்தது. இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தராக ஜி.ஜேம்ஸ்பிச்சை பொறுப்பேற்றார்.

கடந்த 2 ஆண்டுகளாக பாரதியார் பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. இதனால், இலவச கல்வி திட்டம் அமலில் உள்ளதா, இல்லையா என்பது பற்றி மாணவர்களுக்கு குழப்பம் நிலவுகிறது.

விறுவிறுப்பான மாணவர் சேர்க்கை: தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

குறிப்பாக பிளஸ் 2 தேர்வு முடிந்து 10 நாள்களுக்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் இருந்த போதிலும், மாணவர் சேர்க்கை எந்தத் தடையும் இல்லாமல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதேவேளையில், பாரதியார் பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை குறித்த எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது ஏழை மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காண்பித்துவரும் நிலையில், ஏழை மாணவர்கள் அப்படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்று கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாத ஏழை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் முனைப்புக் காட்ட வேண்டும்.

அதேநேரத்தில், இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர் சேர்க்கை குறித்து போதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பது ஏழை  மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோரின் கருத்தாக உள்ளது.

பதிவாளரின் பதில்: இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.மனோகரனை தொடர்புகொண்டு கேட்டபோது, ""பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச கல்வி திட்டம் நடைமுறையில் தான் உள்ளது. பல்கலைக்கழகம் தொடர்ந்து ஏழை, எளிய மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்கலைக்கழக இணையதளத்தில் போதிய அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

வழிகாட்டும் சென்னை பல்கலை.

சென்னை பல்கலைக்கழகத்தில் 2010-2011 கல்வியாண்டில் அப்போதைய துணைவேந்தராக இருந்த க.திருவாசகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும், அதாவது மாணவர் சேர்க்கைக் காலங்களில் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் குறித்து போதிய அறிவிப்புகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. 2014-2015 கல்வியாண்டிற்கும் இலவச கல்வி திட்டம் குறித்து போதிய அறிவிப்புகளை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இலவச கல்வித் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை பல்கலைக்கழகம் பிற பல்கலைக் கழகங்களுக்கு வழிகாட்டும் விதமாக இலவச கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com