கே.எம்.சி.எச். மருத்துவமனையில் புதிய முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட புதிய முறையிலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.
Updated on
1 min read

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட புதிய முறையிலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.
 இதுகுறித்து, மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 சிறுநீரகவியல் துறையில் விரிவான ஆராய்ச்சிக்குப் பின், ஒரு சிக்கலான பிரச்னைக்கு புதிய வழிமுறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. 18 வயது இளைஞர் வலி மற்றும் வாந்தியுடன் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை, பரிசோதனை செய்தபோது சிறுநீரக இயக்கம் மோசமாக இருந்தது தெரியவந்தது. கால்சியம் பற்றாக்குறையால் எலும்புகள் பலவீனமடைந்து, சிறுநீரகம் சுருங்கி, அதை மாற்ற வேண்டிய நிலையில் இருந்தது.
 உடனடியாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மூலமாக ரத்தம் சுத்திகரிக்கப்பட்டது. அவரது தந்தையின் சிறுநீரகம் நல்ல முறையில் இருந்தாலும், ரத்த வகை நோயாளியுடன் பொருந்தவில்லை. ரத்த வகை பொருந்தாமல் இருந்தபோதும் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், சிறுவனுக்குத் தீய வகை எதிர் உயிரிகளை நீக்கத் தீவிர பிளாஸ்மா மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
 தொடர்ந்து, பிளாஸ்மா மாற்று சிகிச்சை அளிப்பதால் ரத்தப் போக்கு அதிகம் ஏற்படும். இந்த நோயாளிக்கும் பலமுறை தொடர்ந்து பிளாஸ்மா மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி தரும் இம்யூனோகுளோபின்களின் இழப்பு, தொற்று நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
 ரத்தத் தொற்று நோயுடன் நோயாளிக்கு இம்யூனோகுளோபின்  மற்றும் பிளாஸ்மா மாற்றம் செய்வது கூடுதல் செலவை ஏற்படுத்தும்.  
 இதையடுத்து, ரத்த வகை பொருத்தமில்லா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இம்யூனோ-அட்சார்ப்ஷன் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கிரகித்தல் முறையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பத்தில் உடலுக்குத் தீமை விளைவிக்கும் எதிர் உயிர்கள் மட்டும் நீக்கப்படும் தன்மை கொண்டவை.
 இதையடுத்து, ஒரு முறை நோய் எதிர்ப்பு சக்தி கிரகித்தல் சிகிச்சை தரப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான முறைகளுக்கு காரணிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து நோயாளி பூரணமாக குணமடைந்துள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com