கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் நவீன கருவிகள் எப்போது நிறுவப்படும் என்ற எதிர்பார்ப்பு நோயாளிகளிடையே எழுந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 30 படுக்கை வசதி கொண்ட புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு, கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நாள்தோறும் சராசரியாக 200-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் இங்கு வந்து செல்கின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மையத்தில், கோபால்ட் டெலிதெரபி எனும் கதிரியக்கக் கருவி 1998-இல் பொருத்தப்பட்டது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கதிரியக்கக் கருவியில் பழுது ஏற்பட்டதன் காரணமாக தற்போது, நோயாளிகள் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும், இந்த மையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, படுக்கை பற்றாக்குறையும் உள்ளது.
இந்நிலையிலப், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வசதிக்காக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க 2012-இல் அரசாணை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 2014-இல் புற்றுநோய் மையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி, சுமார் 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்கள் அடங்கிய கட்டடம் அமைக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள கோபால்ட் டெலிதெரபி எனும் கதிரியக்கக் கருவி மூலமாக சிகிச்சை அளிக்கும்போது, புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி தவிர உடலில் உள்ள பிற பகுதிகளிலும் கதிரியக்கம் செலுத்தப்படும். இதனால், உடலில் உள்ள ஆரோக்கியமான அணுக்களும் உயிரிழக்கும்.
ஆனால், தற்போது உள்ள நவீன கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கும்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு நேரடியாக கதிரியக்கத்தை செலுத்தும்போது புற்றுநோய் அணுக்கள் மட்டுமே இறக்கும். நோயாளிகளுக்கு வேறு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே, நோயாளிக்குத் தரமான புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு நவீன கருவிகள் பெற முடிவு செய்து 2014-இல் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ரூ. 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிதியைக் கொண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தைக் கண்டறிய ரூ. 1.5 கோடி மதிப்பிலான சி.டி. ஸ்டிமுலேட்டர் கருவியும், ரூ. 1.5 கோடி மதிப்பில் நேரடியாக கதிரிக்கம் செலுத்தக் கூடிய பிராக்கி தெரபி கருவியும், 10 செ.மீ. தொலைவில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்துக்கு டெலிதெரபி முறையில் கதிரியக்க சிகிச்சை அளிக்கக் கூடிய ரூ. 9 கோடி மதிப்பிலான லீனியர் எக்ஸ்லேட்டர் கருவியும் பெற முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாக நவீன கருவிகளைப் பெற ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. ஆனால், கருவிகளைத் தயாரிக்கும் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கருவிகளுக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றன.
ஆனால், அரசின் விதிகளின்படி கருவிகளைப் பொருத்திய பின்னரே அரசு சார்பில் பணம் செலுத்தப்படும். இதனால் நவீன கருவிகளைப் பெற முடியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மண்டல புற்றுநோய் மண்டல மையம் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்து ஓராண்டு ஆகியும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்க கூடிய நவீன கருவிகளைப் பெற முடியாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல, மண்டல புற்றுநோய் மையத்தின் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்க பொதுப் பணித் துறை சார்பில் ரூ. 92 லட்சம் நிதி கேட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர்.
எனவே, எட்டு மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மண்டல புற்றுநோய் மையம் செயல்படும் வகையில் நவீன கருவிகளை பெற்று, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை விரைந்து அளிக்கக் கூடிய வகையில் தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது நோயாளிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.
இதுகுறித்து, மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் கூறியதாவது:
8 மாவட்ட மக்களின் நலன் கருதி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மையத்துக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நவீன கருவிகளுக்காக காத்திருக்கிறோம்.
ஆனால், கருவியைத் தயாரிக்கும் நிறுவனம் விதித்துள்ள நிபந்தனை காரணமாக காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தமிழக மருத்துவ சேவைக் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.