தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விநியோகத்தை தமிழக அரசு நிறுத்தியுள்ளதால் அட்டைதாரர்கள் கூடுதல் விலை கொடுத்து சந்தையில் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்களுக்கு நியாய விலைக் கடைகள், கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைக்கள் மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதில், குடும்ப அட்டைகளுக்கு புழுங்கல் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு (ஒரு கிலோ), உளுத்தம் பருப்பு (ஒரு கிலோ), பாமாயில் (ஒரு லிட்டர்) ஆகியவை வழங்கப்படுகின்றன.
இது தவிர, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் ரவை, மைதா, செறியூட்டப்பட்ட கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடலைப் பருப்பு, வெந்தயம், கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், கரம் மசாலா உள்ளிட்ட சில பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
2 மாதங்களாக விநியோகம் நிறுத்தம்: தமிழகம் முழுவதும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை நியாய விலைக் கடைகளில் கடந்த ஜனவரி முதல் விநியோகம் செய்யப்படவில்லை.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி மொத்தமாக கொள்முதல் செய்து மாவட்ட வாரியாக வழங்கி, நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை விநியோகம் செய்யப்பட்டு வந்தன.
தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகிய பொருள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றன. இதர பொருள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் யாரும் பங்கேற்காத காரணத்தாலோ அல்லது அரசின் கொள்கை முடிவு காரணமாகவோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் கொள்முதல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
சந்தையில் கூடுதல் விலை: நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-ம், உளுத்தம் பருப்பு ரூ.30-ம், பாமாயில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் உள்ள இப் பொருள்கள் சந்தையில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.130-ம், உளுத்தம் பருப்பு ரூ.160-ம், பாமாயில் ரூ.70-ம், அதற்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்டத்தின் சராசரி தேவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள அரசின் 1,412 நியாய விலைக் கடைகள், கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 9 லட்சத்து 72,271 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், கோவை மாவட்டத்துக்கு மட்டும் சராசரியாக ஒரு மாதத்துக்கு 630 டன் துவரம் பருப்பும், 630 டன் உளுத்தம் பருப்பும், 650 லிட்டர் பாமாயிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யத் தேவைப்படுகிறது.
இதுகுறித்து பொது விநியோகத் துறை அதிகாரிகள் கூறும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் கடைகளுக்கு அடுத்த மாத விநியோகத்துக்கு என்னென்ன பொருள்கள் தேவை, எவ்வளவு தேவை என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.
அதன்படி, டெண்டர் விடப்பட்டு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும். ஆனால், தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை என்பதால் ரேஷன் கடைகளில் மேற்கண்ட பொருள்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
எனவே, மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கை ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.