இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி

தமிழக உரிமைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:18 am

DIN

தமிழக உரிமைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் ரூ. 216 கோடி மதிப்பில் நடைபெறும் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
கோவை மாவட்டத்துக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கோவை நகரம் வளர்ச்சி அடைந்து பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வெள்ளலூரில்  பேருந்து முனையம் (பஸ் போர்ட்),  லாரி பேட்டை, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், மேற்கு புறவழிச்சாலை, சங்கனூர் ஓடையையொட்டி சாலை ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.  அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்தில் அதிக அளவில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நியாயமான கோரிக்கைக்காக மத்திய அரசுடன் இணக்கமாக செல்வோம்.  அதே நேரத்தில் தமிழக உரிமைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். 
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ராஜிநாமா செய்தனர். அப்போதும், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கவில்லை. 
திமுக ஆட்சிக் காலத்தில் பல மணி நேரம் மின் வெட்டு நிலவியது. ஆனால், அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்பதே கிடையாது. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி நிறைவேற்றப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் மூன்று பகுதியாக அமைகிறது. இதன் மூலம் 10 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.  ஆனால் சிலர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி மக்களவை  உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,  அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகர்,  மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.