எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

கேபிள் சேனல்களின் கட்டண உயர்வைத் தடுக்க வேண்டும்: ஆட்சியரிடம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு

மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்துள்ள புதிய முறையினால் கேபிள் சேனல்களின் கட்டணம் உயரும் என்றும்

Updated On :25 டிசம்பர் 2018, 8:33 am IST

மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்துள்ள புதிய முறையினால் கேபிள் சேனல்களின் கட்டணம் உயரும் என்றும் இதைத் தடுக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
 கோவையில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தினேஷ், செந்தில் உள்ளிட்டோர் தலைமையில், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று மனு அளித்தனர்.
 அதில், ஏழை எளிய, நடுத்தர மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாகவும், தகவல் தொடர்பு சாதனமாகவும் உள்ள கேபிள் டி.வி.க்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதனால், அடிப்படைக் கட்டணமாக ரூ.155-ம், அதன் பிறகு அந்தந்த சேனல்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது ஏழை, எளிய மக்களின் தலையில் விலை உயர்வை சுமத்தி, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கே வழிவகுக்கும். எனவே, கட்டண சேனல்களின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதேபோல், கேபிள் டி.வி.க்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வன விலங்குகளுக்கு தொந்தரவு தரக் கூடாது: சமூக நீதிக் கட்சியின் தலைமை நிலையச் செயலர் தண்டபாணி தலைமையில் சின்ன தடாகம் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு: 
சின்ன தடாகம், பெரிய தடாகம், வீரபாண்டி, சோமையனூர், கஸ்தூரிநாயக்கன்பாளையம், கொண்டனூர் புதூர், ஆலமரமேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்து வருபவர்கள் மூன்று அடிக்கு மட்டுமே மண் எடுக்கலாம் என்று கனிம வளத் துறை அனுமதி அளித்துள்ளது.
 ஆனால், இந்தப் பகுதியில் 4 அடி முதல் 60 அடிக்கும் மேலாக விவசாயத்துக்கு என்று கூறி விவசாயிகள் அல்லாதவர்கள் செம்மண்ணைத் தோண்டி, செங்கல் சூளைக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மண் தோண்டுபவர்கள், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன விலங்குகள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் அவற்றுக்குத் தொல்லை தருபவர்கள் மீதும், வன விலங்குகளின் பாதையை ஆக்கிரமித்திருப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது: இதுகுறித்து போத்தனூர், கதிரவன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனு: 95-ஆவது வார்டுக்குள்பட்ட கதிரவன் நகர், உதயம் நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறோம். இங்குள்ள பொது உபயோகத்துக்கான பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
 இப்பகுதியில் பொதுப் பயன்பாட்டுக்கான கிணறு, குழந்தைகள்  அங்கன்வாடி போன்றவை இருப்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் இவை பாதிக்கப்படும். மேலும், நோய் பரவும் அபாயமும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படும். எனவே, எங்கள் பகுதியில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
புத்தாண்டில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் கூடாது:  இதுகுறித்து ஹிந்து பாரத் சேனா மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டி அளித்துள்ள மனு: 
டிசம்பர் 31-ஆம் தேதி இரவு முதல் அதிகாலை வரை புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கலாசார சீரழிவுகள் நடைபெறுவதையும், ஆகம விதிகளை மீறி கோயில்களைத் திறந்து பூஜை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  எஸ்.சி., எஸ்.டி. இளம் வழக்குரைஞர்களுக்கு தொழில் வளர்ச்சிக்காக வழங்கப்படும் நிதியுதவியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று முற்போக்கு வழக்குரைஞர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. அன்னூர் அச்சம்பாளையத்தில் 
உள்ள தனியார் நிறுவனத்தில் 
இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து நேரிடுவதாகவும் எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.  கணபதி அருகே உள்ள கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதனால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், அப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைவதைத் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.