மத்திய நிதிநிலை அறிக்கை: நுகர்வோர் அமைப்புகளின் பார்வையில்...

கோயம்பத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் பொதுச் செயலர் கே.கதிர்மதியோன்: நாடு முழுவதிலும் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த
Updated on
2 min read

கோயம்பத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் பொதுச் செயலர் கே.கதிர்மதியோன்: நாடு முழுவதிலும் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 கோடி பேருக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்ற திட்டம், உலகத்திலேயே அதிக அளவிலான நுகர்வோருக்காக அறிவிக்கப்பட்ட மிகப் பெரிய சமூகப் பாதுகாப்பு திட்டமாக இருக்கும். ரயில்வே உள்ளிட்ட துறைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது விரிவாக இல்லை.
 பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக இருந்தாலும் அதன் மீதான செஸ் உயர்த்தப்பட்டதால் அதில் கிடைக்கும் நன்மை நுகர்வோருக்குக் கிடைக்காமல் போய்விட்டது. மாத ஊதியதாரர்களுக்குப் போக்குவரத்து, மருத்துவச் செலவுகள் தவிர்த்துப் பிற செலவுகளுக்கு வருமான வரியில் ரூ. 40 ஆயிரம் மொத்த விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நுகர்வோருக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு பலனைக் கொடுக்காது.
கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்பின் தலைவர் ஜெயராமன்: சூரிய சக்தி மின்தகடுகளின் விலை குறைக்கப்பட்டிருப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். தமிழகத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதற்கு பெட்டிகள் பற்றாக்குறையே காரணமாக இருக்கும் நிலையில், பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல, சென்னை - பெங்களூருவுக்கு இடையே ராணுவத் தளவாட ஆலை அமைக்கப்பட இருப்பதும், காற்று மாசு ஏற்படுத்துபவர்களுக்கு வரி விதிப்பு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. ரயில்வேயைப் பொறுத்த வரையிலும் கோவை - பெங்களூரு, கோவை - சென்னை, கோவை - தென் மாவட்டங்களுக்கு இடையிலான ரயில்கள் அறிவிக்கப்படாதது கோவைக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்களை ஒழிப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையிலும் தெரிவித்துள்ளனர். இதற்கு வெகு காலம் ஆகும் என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட தானியங்கி எச்சரிக்கை மணி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மேலும், ரயில்களில் உணவுப் பொருளின் தரம், ரயில் பெட்டிகளின் சுகாதாரத்தைப் பேண வேண்டும். தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை, காய்கறிகள், காலணிகளின் விலை உயரும் சூழல் உருவாகியிருப்பது நுகர்வோருக்கு நல்லதல்ல.
மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன் குமார்: நிதி அறிக்கையில் ரயில்வே துறை தொடர்பான கோவை-பெங்களூரு, கோவை-கன்னியாகுமரி, கோவை-ராமேசுவரம் இரவு நேர ரயில் சேவை விடுபட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தொழில் நகரமான கோவையில் நிறைந்துள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான, குறிப்பிடத்தக்க சலுகைகள், நிவாரணம் அளிக்கப்படவில்லை.
 காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், கோவையில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது தொடர்பான அறிவிப்புகளோ, கோவைக்கு மெட்ரோ ரயில் போன்ற சிறப்புத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளோ இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்: இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளில் ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்பது சரியானதுதான். அந்த நடைமுறை கைவிடப்பட்டு, பொது பட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டிருப்பது என்பது மிகப் பெரிய அதிகார குறைப்பு நடவடிக்கை.
 இதனால் கோவை போன்ற மிகப் பெரிய நகரங்களுக்கு ரயில்வே துறையிடம் இருந்து எதையும் தனியாக கேட்க முடியாத நிலை உள்ளது. கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com