ஆனைமலை தாலுகா: அரசாணை வெளியீடு

ஆனைமலையை தலைமையாக கொண்ட தனி தாலுகா(வருவாய் வட்டம்) அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.      

ஆனைமலையை தலைமையாக கொண்ட தனி தாலுகா(வருவாய் வட்டம்) அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.                                                                      கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி தாலுகா என்பது அதிக கிராமங்களையும், அதிக பரப்பளவையும் கொண்டதாக இருந்து வந்தது. இதனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு பிரிக்கப்பட்டுத் தனி தாலுகாவாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்பின் ஆனைமலையைத் தலைமையாக கொண்ட தனி தாலுகா உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆனைமலையை தனி தாலுகாவாக அறிவித்தார்.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை  தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
 கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டம் 742.63 ச.கி.மீ., பரப்பளவையும், 4 லட்சத்து 75 ஆயிரத்து 128 பேரை மக்கள் தொகையாகவும் உள்ளடக்கியதாகும். இதில், 96 கிராமங்களை உள்ளடக்கிய 8 உள்வட்டங்கள், 3 வருவாய் மண்டலங்கள், 1 சிறப்பு நிலை நகராட்சி, 3 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 84 ஊராட்சிகள் உள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை 419இன் படி ஆட்சி எல்லைகள் கீழ் வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. 
ஆனைமலை தாலுகா: ஆனைமலை தாலுகா பரப்பளவு 368.13 ச.கி.மீ. ஆகும். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள அம்பராம்பாளையம், சிங்காநல்லூர், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தொண்டாமுத்தூர், எஸ்.நல்லூர், வீரல்பட்டி, தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம் ஆகிய 11 ஊராட்சிகள் ஆனைமலை தாலுகாவுக்கு மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளும், வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை,  ஒடையகுளம், கோட்டூர், சமத்தூர் ஆகிய பேரூராட்சிகளும் ஆனைமலை தாலுகா எல்லைக்குள் வரவுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 164 பேர் ஆனைமலை தாலுகாவில் சேவையை பெறலாம்.
பொள்ளாச்சி தாலூக்கா:  பொள்ளாச்சி தாலுகாவின் பரப்பளவு 374.50 ச.கி.மீ. ஆகும். தெற்கு ஒன்றியத்தில் உள்ள சின்னாம்பாளையம், கோமங்கலம், கோமங்கலம்புதூர், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, கூலநாயக்கன்பட்டி, மாக்கினாம்பட்டி, நல்லாம்பள்ளி, நாட்டுக்கல்பாளையம்,  சீலக்காம்பட்டி, சிஞ்சுவாடி, சோளபாளையம், எஸ்.மலையாண்டிபட்டணம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி ஆகிய 15 ஊராட்சிகள் ஏற்கெனவே பொள்ளாச்சி தாலுகாவில் உள்ளபடி அதன் ஆட்சி எல்லையிலேயே தொடரும். 
வடக்கு ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளும் ஏற்கெனவே உள்ளவாறு பொள்ளாச்சி தாலுகாவின் ஆட்சி எல்லையிலேயே தொடரும்.  மொத்தம் 54 ஊராட்சிகள் பொள்ளாச்சி தாலுகாவில் இருக்கும். பெரிய நெகமம், ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி ஆகிய பேரூராட்சிகள் பொள்ளாச்சி தாலுகாவின் ஆட்சி எல்லையில் தொடரும்.
இதன்படி 3 லட்சத்து இரண்டாயிரத்து 964 பேர் பொள்ளாச்சி தாலுகாவின் சேவையைப் பெறலாம். ஆனைமலை தாலுகாவுக்கு பொதுப் பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்டப் பிரிவு, தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல்பிரிவு ஆகியவற்றுக்கு 17 பணியிடங்கள், நில அளவை பிரிவுக்கு 6 இடங்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் புதிதாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com