இந்தியாவில் அனைத்து தரப்பினரும் செல்லிடப்பேசி பயன்படுத்துவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான் காரணம் என திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
பாஜக மற்றும் அதிமுக தலைமையிலான மத்திய, மாநில ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, மக்களவைத் தேர்தலில் அவர்களை வெளியேற்ற அனைத்து தரப்பு மக்களும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார். தற்போது, இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் செல்லிடப்பேசி பயன்படுத்த ஆ.ராசாதான் வழிவகுத்தார் என்றார்.
பொள்ளாச்சியில்...: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பேசியதாவது: புதிய இந்தியா உருவாகும் என்று கூறினார். ஆனால் ஏதும் நடக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது, தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அலை வீசுகிறது. திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு, ஏழை மாணவர்கள் கல்விக் கடன், விவசாயக் கடன் ஆகியவை ரத்து செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.