பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் கட்டணம்: உள்ளாட்சி அமைப்புகள் நிதியை வீணடிப்பதாக குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு பயன்படுத்தப்படாத
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் கட்டணம்: உள்ளாட்சி அமைப்புகள் நிதியை வீணடிப்பதாக குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு பயன்படுத்தப்படாத மின்சாரத்துக்காக மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் சார்பில் மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, மின் விளக்கு உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. 
முக்கியத் தேவையான குடிநீர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மின்வாரியத்திடம் முறையாக மின் இணைப்பு பெற்று ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகள் அனைத்திலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் ஒரே கிராமம், வார்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. குடியிருப்புகளுக்கான பெரும்பாலான தண்ணீர் தேவை ஆழ்துளைக் கிணறுகள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கிராமங்களில் பெரும்பாலும் தண்ணீருக்கு ஆழ்துளைக் கிணறுகளையே மக்கள் நம்பியுள்ளனர்.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தண்ணீர்த் தேவைக்காக அமைக்கப்பட்டு, தண்ணீர் கிடைக்காத ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்படுகின்றன. இதுபோன்று, தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகளுக்கும் மின்சார பயன்பாட்டுக்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தி வேண்டிய நிதி பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்காக வீணாக கட்டப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் கே.கதிர்மதியோன் கூறியதாவது: 
உள்ளாட்சி அமைப்புகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்காக மின் இணைப்பு பெறப்படுகிறது. தண்ணீர் கிடைக்காத ஆழ்துளை கிணறுகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. இதனால், மின்சாரப் பயன்பாடு இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க சராசரியாக 10 கிலோ வாட் அளவிலான மின் இணைப்பு பெறப்படுகிறது. 1கிலோ வாட் அளவிலான மின் இணைப்பில் 1 யூனிட் மின்சாரப் பயன்பாட்டுக்கு கட்டணம் ரூ.120 வசூலிக்கப்படுகிறது. அதன்படி 10 கிலோ வாட்  அளவிலான மின் இணைப்புக்கு ரூ.1,200 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் தாலுகாவில் பகத்தூர் கிராமத்தில் ஓர் ஆழ்துளைக் கிணற்றுக்கு 36 கிலோ வாட் அளவு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. இதற்கு ரூ.4,200 கட்டணம் செலுத்தப்படுகிறது. 
அதன்படி கோவை மாவட்டத்தில் 3,396 ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின்சாரப் பயன்பாடு இல்லாமலே மின் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தி வருகின்றன.  மின்வாரியத்தில் 2007 ஆம் ஆண்டில் இருந்து ஆன்லைன் நடைமுறை கொண்டு வரப்பட்டதால் அந்த ஆண்டிலிருந்து உள்ளாட்சி அமைப்புகள் மின் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதற்கு முன்பும் கட்டியிருக்க வாய்ப்புள்ளது.
வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதியினை பயன்படுத்தப்படாத மின்சாரத்துக்காக செலுத்தி வருகின்றனர். 
எனவே, இனியாவது மின்வாரியத்தில் 0 யூனிட் மின்சாரப் பயன்பாடு வரும் மின் இணைப்புகளின் பட்டியலைப் பெற்று அதன் இணைப்புகளை துண்டிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஆட்சியர் கு.ராசாமணியிடம் கேட்டபோது, "உள்ளாட்சி அமைப்புகளில் வறட்சிக் காலங்களில்தான் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. சில ஆழ்துளைக் கிணறுகளில் சில மணி நேரம் மட்டும் தண்ணீர் கிடைக்கும். 
இக்கிணறுகள் பருவ  மழைக் காலங்களில் நீர் ஊறிக்கொள்வதால், அப்போது தொடர்ந்து தண்ணீர் பெறப்படும். வறட்சிக் காலங்களில் இதுபோன்ற தண்ணீர் கிடைக்காத ஆழ்துளைக் கிணறுகள் இயக்கப்படாது. இதனால் மின்சாரப் பயன்பாடும் இருக்காது. பருவ மழைக்குப் பின் தண்ணீர் ஊறிக்கொள்வதால் குறிப்பிட்ட சில மாதங்கள் வரை ஆழ்துளைக் கிணறுகளை இயக்கி தண்ணீர் பெறப்படுகிறது. மற்றபடி தண்ணீர் முற்றிலும் கிடைக்காத ஆழ்துளைக் கிணறுகள் உடனுக்குடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கிணறுகளும் மூடப்படுகின்றன' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com