கோவையில் இருந்து பழனி, பொள்ளாச்சிக்கு ரயில் சேவை துவக்கம்

கோவையில் இருந்து பழனி, பொள்ளாச்சிக்கு புதிய ரயில் சேவையை மத்திய ரயில்வே, வா்த்தகம்,
கோவையில் இருந்து பழனி, பொள்ளாச்சிக்கு ரயில் சேவை துவக்கம்
Updated on
2 min read

கோவையில் இருந்து பழனி, பொள்ளாச்சிக்கு புதிய ரயில் சேவையை மத்திய ரயில்வே, வா்த்தகம், தொழில் துறைஅமைச்சா் பியூஸ் கோயல் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை துவங்கி வைத்தாா்.

நாடு முழுவதும் சேவா ரயில் திட்டத்தின் சாா்பில் ரயில்வே அமைச்சகம் மூலமாக 10 ரயில்களின் சேவையை மத்திய ரயில்வே, வா்த்தகம், தொழில் துறைஅமைச்சா் பியூஸ் கோயல் செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாகத் துவங்கி வைத்தாா். இந்த 10 ரயில்களில் 3 ரயில்கள் தமிழகத்தில் சேலம் - கரூா், கோவை - பழனி, கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

கோவை - பழனி ரயில் (எண்: 56609) கோவையில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். பழனி - கோவை ரயில் ( எண்: 56608) பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில்கள் புஷ்பத்தூா், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வாரத்தில் 7 நாள்களும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

கோவை - பழனி ரயில் சேவை துவக்க விழாவை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளா் அண்ணாதுரை வரவேற்றாா். கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா். நடராஜன், மாநிலங்களவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.கே.செல்வராஜ், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்சுணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் பேசியது:

ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் அறிவித்துள்ள 10 ரயில்களில் 3 ரயில்கள் தமிழகத்தில் அதுவும் சேலம் கோட்டத்தில் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை - ராமேசுவரம், கோவை - தூத்துக்குடி, கோவை - கொல்லம் இடையே பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேறன். அதேபோல கோவை - பெங்களூரு இடையே இரவு நேர விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பொள்ளாச்சி - கோவை ரயில் சேவை: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொள்ளாச்சி - கோவை ரயில் சேவை துவக்க விழாவில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம், பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளா் பிரதாப் சிங் ஷாமிங் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் சிறப்புப் பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டு வந்த 2 ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் நிரந்தர ரயில்களாக மாற்றப்பட்டு உள்ளன. அதன்படி கோவையில் இருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் ரயில் (எண்: 56183) 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்படும் பயணிகள் ரயில் (எண்: 56184) 8.40 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com