ஓய்வுபெறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 3 சென்ட் நிலம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
By DIN | Published On : 01st April 2019 08:45 AM | Last Updated : 01st April 2019 08:45 AM | அ+அ அ- |

வால்பாறை பகுதி தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு 3 சென்ட் நிலம் கட்டாயம் வழங்கப்படும் என வால்பறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வால்பாறையில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வால்பாறை அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது:
வால்பாறை பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு முதல்கட்டமாக 112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது கட்டமாக கூடுதல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
எஸ்டேட் நிர்வாகத்தினரிடம் உள்ள புறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்தி, ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு 3 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும். சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில் அக்காமலை, புல்மேடு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வரவும், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேயிலை அல்லாது மாற்றுத் தொழில் அமைத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார்.
முன்னதாக அதிமுக நகரச் செயலாளர் மயில்கணேசன் வரவேற்றார். முடிவில் நகர துணைச் செயலாளர் பொன்கணேஷ் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.