தேர்தலுக்கு முந்தைய நாளும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு கோரிக்கை
By DIN | Published On : 01st April 2019 08:46 AM | Last Updated : 01st April 2019 08:46 AM | அ+அ அ- |

வெளியூரில் வசிப்பவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வசதியாக தேர்தலுக்கு முந்தைய நாளும் (ஏப்ரல் 17) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் செயலர் நா.லோகு, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், சொந்த ஊரில் வாக்கு உரிமை பெற்றுள்ள வாக்காளர்கள் வேலை நிமித்தமாகவும், சுயதொழில் காரணமாவும் பல்வேறு மாவட்டங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களில் 20 சதவீத வாக்காளர்கள் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுபோல சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வசிக்கின்ற வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த மாவட்டத்திலேயே வாக்குப் பதிவு செய்யும் நிலை உள்ளது.
இதனால், வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னரே தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மட்டுமே அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாக்காளர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்குப் பதிவு செய்யும் வகையில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு முந்தைய நாளையும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.