வேலைவாய்ப்பு அதிகரிக்க புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம்
By DIN | Published On : 01st April 2019 08:44 AM | Last Updated : 01st April 2019 08:44 AM | அ+அ அ- |

வேலைவாய்ப்பு மிகுந்த நகரமாக கோவையை உருவாக்க புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: நொய்யல் ஆற்றை தூர்வாரி, அதன் வழித்தடங்களை சீரமைத்து குளம், கால்வாய், குட்டைகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பேன்.
சிறு, குறு தொழில்கள் நசிவால் கோவையில் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளன. எனவே, வேலைவாய்ப்பு மிகுந்த கோவை என்ற திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பேட்டைகளை ஏற்படுத்துவேன். படித்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் மாற்று அரசியல் புரட்சியை ஏற்றுக் கொள்ளும் முனைப்பில் உள்ளனர் என்றார்.