எழில் கொஞ்சும் பொள்ளாச்சியை வசப்படுத்தப் போவது யார்?

தமிழகத்தில் அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெறும் பகுதி பொள்ளாச்சி. இதனால், இந்தப் பகுதியில் தென்னைசார்

தமிழகத்தில் அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெறும் பகுதி பொள்ளாச்சி. இதனால், இந்தப் பகுதியில் தென்னைசார் தொழில்கள் அதிகமாக உள்ளன. தென்னைசார் பொருள்களின் ஏற்றுமதியும் அதிகம் நடைபெறுகிறது.
தென்னை மரங்கள், நெல் வயல்கள், மலைத் தொடர், அணைகள், அருவிகள், டாப்சிலிப், பரம்பிக்குளம் என இயற்கை எழில்கொஞ்சும் சொர்க்க பூமியாக பொள்ளாச்சி காட்சியளிக்கிறது. எனவே, திரைப்பட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது. 
பிஏபி எனும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டம் விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில், மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளை இணைத்து கிழக்கு நோக்கி திசைமாற்றி குகைகள், கால்வாய்கள் வழியாக தமிழகத்துக்குக் கொண்டுவந்து தமிழகத்தின் வறண்ட பகுதிகளுக்கு நீர்ப் பாசனம் செய்ய உதவுகிறது இந்த பிஏபி திட்டம். இன்றும் நாடு முழுவதும் பொதுப் பணித் துறையில் புதிதாகப் பணியில் சேரும் அதிகாரிகள் வந்து பார்த்து கற்றுச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. பொள்ளாச்சி தொகுதிக்கு உள்பட்ட வால்பாறை, தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பொள்ளாச்சி, வால்பாறை, மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. 
இதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி தொகுதியில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், உடுமலை தொகுதியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் என அதிமுகவின் மூன்று முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
இதுதவிர கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளன. மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதி மட்டும் திமுக வசம் உள்ளது.    
இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், மதிமுக 2 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 
2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் 4 லட்சத்து 17 ஆயிரத்து 92 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜக கூட்டணியில் இருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் 2 லட்சத்து 76 ஆயிரத்து 118 வாக்குகள் பெற்றார். திமுக 2 லட்சத்து 51 ஆயிரத்து  829 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 
கொங்கு வேளாளக் கவுண்டர், செட்டியார், நாயக்கர், அருந்ததியர், வேட்டுவக் கவுண்டர் மற்றும் இதர சமூகத்தினர், சிறுபான்மையினர் ஆகியோர் இங்கு கணிசமாக உள்ளனர். 
தொகுதியில் நிலவும் 
பிரச்னைகள்:
தென்னை விவசாயம் அதிக அளவில் உள்ள பொள்ளாச்சி தொகுதியில் தண்ணீர்த் தேவை முக்கியமானதாக உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் 60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது ஆனைமலையாறு- நல்லாறு திட்டம். 
இந்தத் திட்டம் தேர்தல் அறிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டங்களின் சாத்தியக்கூறுகளை அறிய உயர்நிலை வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. 
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழக அரசுக்குத் தொடர்ந்து கேரளம் இடையூறு செய்துவருகிறது. இதுவும் பேச்சுவார்த்தையின் வாயிலாகத் தீர்க்கப்பட வேண்டும்.
வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியப் பிரச்னையும், போனஸ் பிரச்னையும் நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகிறது.  
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் புகழ் வாய்ந்ததாக இருந்துவருகிறது. 
இக்கோயிலுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்தும் அங்குள்ள கழிவுகளை கோயில் நிர்வாகம் தூய்மைப்படுத்துவதில்லை என்பது புகாராக இருந்து வருகிறது. 
ஆழியாற்று நீரை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குடிநீராகப் பயன்படுத்திவரும் நிலையில், பல்வேறு பேரூராட்சிகள், ஊராட்சிகளின் கழிவுகள் ஆழியாற்று நீரில் கலப்பதால் குடிநீர் மாசடைந்து வருகிறது. 
பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு அகல ரயில்பாதை அமைத்தும்கூட, பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
யாருக்கு வாய்ப்பு?
பொதுவாக பொள்ளாச்சி தொகுதி அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்டுவருகிறது. தற்போதைய அதிமுக எம்.பி. சி.மகேந்திரன் நீண்ட காலக் கோரிக்கையான பொள்ளாச்சி- கோவை சாலையை  நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் இருந்து ரூ. 650 கோடி நிதி பெற்றுத் தந்துள்ளார். இதுதவிர பொள்ளாச்சி- திண்டுக்கல் வரை விரைவுச் சாலை அமைக்க ரூ. 3,650 கோடி நிதி பெற்று பணிகள் துவங்கியுள்ளன.
உடுமலை புறவழிச் சாலை, பொள்ளாச்சி கிழக்கு- மேற்கு புறவழிச் சாலை, கோவையில் புறவழிச் சாலை என ரூ. 5000 கோடிக்கும் மேல் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று பொள்ளாச்சி தொகுதியின் சாலை கட்டமைப்புகளை வளர்ச்சியடைய செய்துள்ளார். 
பொள்ளாச்சி தொகுதி தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப்பரைத் தேங்காய் விலையை 50 சதவீதம் உயர்த்தி ரூ. 95.21 ஆக பெற்றுத் தந்துள்ளார். பொள்ளாச்சி- போத்தனூர், பொள்ளாச்சி- திண்டுக்கல், பொள்ளாச்சி- பாலக்காடு அகல ரயில்பாதைப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றபோது, கூடுதல் நிதிபெற்றுத் தந்து பணிகளை விரைவுபடுத்தினார். 
திமுக கூட்டணி சார்பாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர் 2009 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். ஏற்கெனவே போட்டியிட்டுள்ளதால் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
அமமுக சார்பில் விவசாயி முத்துக்குமார் போட்டியிடுகிறார். கடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளதால் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர். மக்கள் நீதி மய்யம் சார்பில் மூகாம்பிகா ரத்னம் போட்டியிடுகிறார். இவர் சமூக சேவைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். நாம் தமிழர் கட்சி சார்பில் சனுஜா போட்டியிடுகிறார். மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை பிரச்னை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அதிமுகவுக்கு கடும் சவாலாக ஆகக் கூடும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

2009 தேர்தலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்
சுகுமார் (அதிமுக) .............3,05,935                                                          
சண்முகசுந்தரம் (திமுக) ....2,59,910                                                
பெஸ்ட் ராமசாமி ................1,03,004

2014 தேர்தலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்
மகேந்திரன் (அதிமுக )  .....4,17,092                                                   
ஈஸ்வரன்  (கொமுக)  .........2,76,118     
பொங்கலூர் பழனிசாமி 
(திமுக) .............................2,51,829


வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்--  7,36,632
பெண்கள்--  7,63,777 
மூன்றாம் பாலினம்-- 160
மொத்தம்--  15,00,569
புதிய வாக்காளர்கள்-- 1,19,701

முக்கிய வேட்பாளர்கள்
அதிமுக-- சி.மகேந்திரன்
திமுக -- கு.சண்முகசுந்தரம்                                                  
அமமுக -- எஸ்.முத்துக்குமார்                                                
மக்கள்நீதி மய்யம்-- மூகாம்பிகா ரத்தினம்
நாம் தமிழர் கட்சி-- உ.சனுஜா


இதுவரை வென்றவர்கள்
1951-- தாமோதரன் (காங்கிரஸ்)
1957-- பி.ஆர்.ராமகிருஷ்ணன் (காங்கிரஸ்)
1962-- சி.சுப்பிரமணியம் (காங்கிரஸ்) 
1967-- நாராயணன் (திமுக)                      
1971-- நாராயணன் (திமுக) 
1971-- காளிங்கராயர் (திமுக) இடைத்தேர்தல்
1977-- கே.ஏ.ராஜு (அதிமுக)
1980-- சி.டி.தண்டபாணி (திமுக) 
1984-- அண்ணாநம்பி (அதிமுக) 
1989-- ராஜாரவிவர்மா(அதிமுக) 
1991-- ராஜாரவிவர்மா (அதிமுக) 
1996-- கந்தசாமி (தமாகா) 
1998-- தியாகராஜன் (அதிமுக) 
1999-- கிருஷ்ணன்  (மதிமுக) 
2004--கிருஷ்ணன் (மதிமுக) 
2009--சுகுமார் (அதிமுக) 
2014-- மகேந்திரன் (அதிமுக)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com