மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்காக 975 சக்கர நாற்காலிகள் தயார்
By DIN | Published On : 11th April 2019 08:08 AM | Last Updated : 11th April 2019 08:08 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளி வாக்களர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக 975 சக்கர நாற்காலிகள் வாக்குச் சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 975 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச் சாவடி மையங்களில் குடிநீர், கழிப்பறை, மின் விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதற்கு வேண்டிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 686 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வாக்களிக்க கோவை மாவட்டத்தில் உள்ள 975 வாக்குச் சாவடி மையங்களுக்கும் மையத்துக்கு ஒரு சக்கர நாற்காலி வீதம் 975 சக்கர நாற்காலிகள் வாக்குச் சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கூடுதல் நாற்காலிகள் தேவைப்படும் வாக்குச் சாவடி மையங்களுக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகளுக்கும் சைகை மொழி மூலம் உதவி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றனர்.