பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மோசடி
By DIN | Published On : 12th April 2019 09:03 AM | Last Updated : 12th April 2019 09:03 AM | அ+அ அ- |

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியது:
பிரதமர் மோடி 2016-இல் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதற்கு முன்னதாகவே சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
அவை இந்தியாவில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களுக்கு 40 சதவீத கமிஷன் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டன. இந்த முறைகேடு தொடர்பாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் பேசும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல ரஃபேல் விமான கொள்முதலில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் மே 17 இயக்கம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஆளுங்கட்சிகளின் தவறுகள் குறித்து மக்களுக்கு விளக்கி வருகிறோம். இதற்காக கோவையில் சனிக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர்.