மக்கள் குறைகளைக் கேட்க வார்டு வாரியாக குறைதீர் குழுக்கள்: மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வாக்குறுதி
By DIN | Published On : 12th April 2019 09:01 AM | Last Updated : 12th April 2019 09:01 AM | அ+அ அ- |

கோவை தொகுதியில் மக்கள் குறைகளைக் கேட்க வார்டு வாரியாக குறைதீர் குழுக்கள் அமைக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர்.மகேந்திரன் வியாழக்கிழமை பிரசாரத்தின்போது கூறினார்.
கோவை மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.மகேந்திரன், கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது பிரசாரத்தைக் காலை 8 மணிக்குத் தொடங்கினார். அங்கிருந்து அம்மன் குளம், புலியகுளம், பெரியார் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
பெரியார் நகர் பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த பொதுமக்கள், இப்பகுதியில் பலர் வீடுகள் இல்லாமல் சாலையோரம் குடிசைகள் அமைத்து தங்குவதாகவும், இதனால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். அதற்கு மகேந்திரன், தான் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டால் வாக்குறுதிப்படி 2024 ஆம் ஆண்டுக்குள் கோவையை குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.
பெரியார் நகர் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, கோவை முழுவதும் 100 வார்டுகளிலும் வார்டு வாரியாகக் குறைதீர் குழுக்கள் அமைக்கப்படும். அதற்கு ஒரு நபர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார். அவர்களிடம் மக்கள் தெரிவிக்கும் குறைகள் உடனடியாக எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும். குறைகளின் அவசரத்தை உணர்ந்து உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.