கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட  இளைஞர் காவல் நிலையத்தில் சாவு

கோவையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). இவருக்கு பேச்சிமுத்து என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் டி.கே.மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. 
இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பெரிய கடை வீதி போலீஸார், கார்த்திக்கைப் பிடித்து அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கார்த்திக், தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் எனவே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். ஆனால், கார்த்திக் நடிப்பதாக நினைத்த போலீஸார் அவர் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. 
பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து அங்கேயே மயங்கியுள்ளார். இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதையடுத்து அவரது சடலம் கோவை மாவட்ட நீதித் துறை நடுவர்(எண். 5) இனியா கருணாகரன் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 
தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த கார்த்திக்கின் உறவினர்கள், போலீஸாரின் அஜாக்கிரதையால் கார்த்திக் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டினர். எனவே இதுகுறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com