கோவைக்கு வந்த இலங்கை இளைஞர் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
By DIN | Published On : 26th April 2019 01:04 AM | Last Updated : 26th April 2019 01:04 AM | அ+அ அ- |

கோவைக்கு அண்மையில் வந்து சென்ற இலங்கை இளைஞர் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவை வந்துள்ளார். கோவையில் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர் பலரைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நபர் யார், எதற்காக கோவை வந்து சென்றார் என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
6 இளைஞர்களிடம் விசாரணை
இதற்கிடையே கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சக்திசேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், முகமது ஆஷிக், சம்சுதீன், முகமது சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, சாகுல் ஹமீது உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரில் சிலருக்கு ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக என்ஐஏ சார்பில் சென்னை, கோவை, திண்டிவனம் பகுதிகளில் உள்ள கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனையிட்டனர். இதில் பென் டிரைவ்கள், சிடிக்கள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் தில்லியில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களின் முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூகவலைதளத் தொடர்புகளை என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்தனர். அதில், கைது செய்யப்பட்ட நபர்களைக் கோவையைச் சேர்ந்த 6 பேர் தீவிரமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 6 பேர், அவர்களைப் பின் தொடர்ந்த கோவை இளைஞர்கள் 6 பேர் என மொத்தம் 12 பேரும் இலங்கையைச் சேர்ந்த சிலருடன் சமூகவலைதளங்கள் மூலமாகத் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் தங்களுக்குள்ளாக இருநாட்டு நிலவரங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் சமூகவலைதளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். மெசஞ்சர் மூலம் தங்களுக்குள் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இலங்கையில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கலாம் என மத்திய உளவுத் துறையை என்ஐஏ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அவர்கள் இந்திய அரசு மூலமாக இலங்கைக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை என்ஐஏ அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட 6 பேருடன் சமூகவலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்த 6 பேரிடம் கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். இதில் அவர்களது சமூகவலைதளத் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர்களது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் விரைவில் சோதனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.