மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்துப் பெற மாநகராட்சி முடிவு
By DIN | Published On : 04th August 2019 09:20 AM | Last Updated : 04th August 2019 09:20 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்துப் பெறுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் தினமும் 800 டன் குப்பை சேகரமாகிறது. இவை லாரிகள் மூலம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்குக் கொண்டு சென்று கொட்டப்படுகின்றன. குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படுவதால் வெப்பம் அதிகமாக உள்ள சமயத்தில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பொதுமக்களிடம் மக்கும், மக்காதக் குப்பைகளை தரம் பிரித்து பெற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
650 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியான பிளாஸ்டிக் பொருள்களை மக்கும் குப்பைகளில் இருந்து பிரித்துத் தனியாகக் கொட்டி வைக்கும் போது தீப்பிடிக்க வாய்ப்பில்லை. கிடங்கில் தினமும் குவியும் 800 டன் குப்பைகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்க அதிக பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் அவற்றை பிரிப்பதற்கு காலதாமதமும் ஏற்படும்.
எனவே வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும்போதே தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி வருகிறோம். வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை பெறவும், மற்ற நாள்களில் மக்கும் குப்பைகளைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம் என்றார்.