மேற்கு மண்டலத்தில் விபத்து உயிரிழப்பு 19% குறைந்துள்ளது
By DIN | Published On : 04th August 2019 09:24 AM | Last Updated : 04th August 2019 09:24 AM | அ+அ அ- |

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் விபத்து உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 19 சதவீதம் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.
அன்னூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேற்கு மண்டலத்தில் விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 19 சதவீதம் குறைந்துள்ளது. உயிரிழப்பு இல்லாத விபத்துகள் 12 சதவீதம் குறைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை மூலம் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பெண் காவலர்கள் மூலம் தகுந்த ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை, மாணவர்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.