இராமலிங்கர் பணி மன்றம் சார்பில் ஆகஸ்ட் 31இல் மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டி
By DIN | Published On : 28th August 2019 10:15 AM | Last Updated : 28th August 2019 10:15 AM | அ+அ அ- |

இராமலிங்கர் பணி மன்றமும், டாக்டர் என்ஜிபி கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து மாநில அளவிலான கலை, இலக்கிய போட்டிகளை கோவையில் வரும் 31 ஆம் தேதி நடத்துகின்றன.
அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் ஆன்மிக, இலக்கிய பணிக்கு புகழ் சேர்ப்பதாக கடந்த 50 ஆண்டுகளாக சென்னையில் இராமலிங்கர் பணிமன்றம் செயல்பட்டு வருகிறது. வள்ளலார், காந்தியடிகளின் அறநெறிக் கருத்துகளை பரப்பும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலும், மண்டல அளவிலும் இசை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மண்டலஅளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கம் பொள்ளாச்சியில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு இசை, மனனம், பேச்சு ஆகிய பிரிவுகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை ஆகிய பிரிவுகளிலும் மாநில அளவில் கலை, இலக்கிய போட்டிகள் கோவையில் உள்ள டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரியில் வரும் 31ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5,000 இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 என மொத்தம் ஐந்து பிரிவுகளுக்கு சேர்த்து ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் www.mcet.in என்ற இணையதளத்திலிலோ அல்லது ramalingar@mcet.in என்ற மின்னஞ்சலிலோ, 9445637190, 9976144451 என்ற செல்லிடப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இராமலிங்கம் பணிமன்றம் இத்தகவலை தெரிவித்துள்ளது.